Friday, September 23, 2011

எங்கேயும் எப்போதும் .....

எங்கேயும் எப்போதும் .....
மரணமும் காதலும் நம் பின்னே! எங்கேயும் எப்போதும் .....
நம்பிக்கையும் முயற்சியும் நம் முன்னே! எங்கேயும் எப்போதும் .....
பின்னால் வரபோவதை எண்ணி எண்ணி ..
நம் முன்னால் இருக்கும் சிகரங்களை மறவாதே! எங்கேயும் எப்போதும் .....


விரைவில் ஒரு சிறுகதை...

Saturday, October 2, 2010


என் காதல் கனவு...


காதல் இளைஞர்களின் கனவு. நான் மட்டும் விதி விலக்கல்ல...அப்போது நான் பொறியியல் கல்லூரியில் 3 வது ஆண்டு படித்து கொண்டு இருந்தேன். கல்லூரியின் அந்த நாட்கள் என் வாழ்வின் பல சம்பவங்களுக்கு காரணமானது.
நான் தினமும் கல்லூரிக்கு எனது ஊரில் இருந்து செல்வது வழக்கம். காலை 7:45 மணிக்கு நான் கல்லூரி செல்லும் தனியார் பேருந்து எனது ஊருக்கு 5 KM தொலைவில் உள்ள பாடாலுரில் இருந்து செல்லும். நானும் எனது நண்பனும் இரு சக்கர வாகனத்தில் வந்து அங்கிருந்து கல்லூரிக்கு செல்வோம்.

நாங்கள் கிராமத்தில் இருந்த காரணத்தால் தினமும் காலை 5:30 மணிக்கு எழுந்து விடுவேன். இல்லையென்றால் என் அம்மாவிடம் அர்ச்சனை வாங்க வேண்டி இருக்கும். அதற்கு பயந்து கொண்டே தினமும் எழுந்து விடுவது, அது மட்டுமல்லாமல் என் அம்மாவிற்கு உதவியாக சில வேலைகள் செய்வேன், காரணம் மதிய உணவு எடுத்து செல்லத்தான். இல்லையென்றால் கல்லூரி உணவகத்தில் சாப்பிட வேண்டும். அந்த சாப்பாடு சாப்பிடுவதற்கு பட்டினி கிடக்கலாம்.தினமும் என் வீட்டு அருகில் இருக்கும் கிணற்றில் குளிப்பது வழக்கம்.

அன்றும் வழக்கம்போல் எழுந்து, கிணற்றுக்கு சென்றேன் என் நண்பனுடன். தினமும் நன்றாக பேசும் அவன் அன்று ஏனோ உம்மென்று இருந்தான். கேட்டதற்கு எதுவும் சொல்லாமல் குளித்தான், நான் அவனிடம் என்ன மச்சான் உன் காதலி வீட்டில் எதுவும் பிரச்சனையா என்று கேட்டேன். இல்லையென்று சொன்னான், நான் விடாமல் என்னவென்று கேட்க, நேற்று அவன் காதலியுடன் பேச முடியவில்லை என்றான், அது மட்டுமில்லாமல் தினமும் 1 மணி நேரம் பேசுவோம் ஆனால் இரண்டு நாளாக அதிகம் பேச முடியவில்லை என்றான், ஏன்டா அப்படி என்னதான் ஒரு மணி நேரம் பேசுவீங்க என்று கேட்டுவிட்டு, எப்ப பாரு அவகிட்ட பேச முடியலன்னு பொலம்பிகிட்டு என்றேன். அவன் கண்களில் கொலை வெறியுடன், மாப்ள நீயும் காதலிச்சு பாரு அப்பா தெரியும் என்று சாபம் கொடுத்தான். நல்ல வேலை எனக்கு அந்த மாதிரி எதுவும் வியாதி இல்லையென்றும் இனியும் வராது என்றும் சொல்லிகொண்டே கிணற்றில் இருந்து ஏறினோம், அன்று நடக்க இருந்த நிகழ்வினை அறியாமல்.

வீட்டில் இருந்து பாடாலூர் கிளம்பினோம், கல்லூரி செல்லும் பேருந்து வழக்கத்திற்கு மாறாக அன்று கும்பல் அவ்வளவாக இல்லாமல் இருந்தது. நானும், நண்பனும் பேருந்தில் ஏறி எப்போதும் போல் அரட்டையை நடத்துனரிடம் ஆரம்பித்தோம். பேருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருக்க, இடையில் எந்த ஊரிலும் பயணிகள் இல்லாததால் வேகமெடுக்க தொடங்கியது.இன்னும் 15 km கடந்தால் திருச்சி சென்று விடலாம். இதுவரை நான் இவ்வளவு சீக்கிரமாக கல்லூரிக்கு சென்றதில்லை, ஆனால் அந்த நினைப்பு வெகு நேரம் இல்லை, தூரத்தில் ஒரு பயணி காத்திருக்க, ஓட்டுனர் பேருந்தின் வேகத்தை குறைக்க தொடங்கினார், அப்போது நான் அறியவில்லை என் வாழ்விலும் பல வேக தடைகள் வரப்போவதை. பேருந்து அந்த பயணி கை நீட்டிய இடத்தில் நின்றது, "நெஞ்சை பூபோல் கொய்து விட்டால் " பாடல் ஒலித்து கொண்டிருந்தது பேருந்தில். நான் அண்ணே, இங்கல்லாம் ஏன் நிறுத்துறீங்க என்றேன், பேருந்தில் ஏறிவரும் அந்த தேவதையை காணாமல். பேருந்து மீண்டும் வேகமெடுக்க தொடங்கியது, நான் மெல்ல திரும்பி அந்த பெண்ணை பார்த்தேன், "தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன்" பாடல் வரிகள் என் செவிகளில் கேட்டது, எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை. அப்போதுதான் கவனித்தேன் பேருந்தில் நான், என் தோழன் அந்த பெண் மூவரும் நின்று கொண்டிருப்பதை. நான் பெண்களிடம் அவ்வளவாக பேசியது இல்லை (நம்புங்க). என் நண்பன் என்னிடம் மச்சான் பிகர் நல்லா இருக்குடா என்றான், பெண்ணை பார்த்து ஏன் நிலா என்று சொல்கிறார்கள் என்று அவளை பார்த்துதான் புரிந்து கொண்டேன், அவள் ஒன்றும் பேரழகி இல்லையென்றாலும் என் விழிகள் அவளின் தாமரை போன்ற முகத்தை பார்க்கதொடங்கின எனை அறியாமல். நான் பார்ப்பதை கவனித்த அவள் தன்னுடைய உடைகளை சரி பார்த்துகொண்டு அவள் வேல் போன்ற விழிகளினால் என் இதயத்தின் எங்கோ ஒரு மூலையில் பதம் பார்க்க தொடங்கினாள். நான் நினைக்கவில்லை, அவளை பார்த்தவுடன் எனக்கும் ஏதோ இனம் புரியாத உணர்வு உண்டானதை, நான் அறிந்திருக்கவில்லை அதுதான் காதலின் ஆரம்பம் என்று.அது எப்படி முதல் பார்வையில் காதல் வரும் என்று அன்றுதான் அறிந்தேன். பேருந்து திருச்சி வந்து சேர்ந்தது, அனால் என் மனம் என்னிடம் இருந்து அவளை நோக்கி செல்ல தொடங்கியது. என் நண்பன்தான் என் கனவில் இருந்து என்னை நிகழ் காலத்திற்கு மீட்டு வந்தான், நான் அவனிடம் மச்சான் அந்த பொண்ணு கிட்ட பேசனும் என்றேன், அவன் என்னை ஒரு கேலிப்பார்வையுடன் இவ்வளவு சீக்கிரம் இது நடக்கும் என்று நான் நினைக்கல என்று சொல்லிவிட்டு, என்னிடம் அவளிடம் பேச சொன்னான், அவ்வளவு நேரமும் அவள் எனது அருகில் இருந்ததன் காரணம் சில்லறை பாக்கி என்று அறிந்தேன், நடத்துனர் டேய் இந்த பொண்ணுகிட்ட ரூ.50 கொடுடா என்றார், என் நிதி நிலைமை அறியாமல், உடனே நண்பனின் சட்டை பையில் இருந்த பணத்தை எடுத்து கொடுத்தேன், அவள் என்னிடம் நன்றி சொல்லிவிட்டு நடக்க நான் அவளை பின்தொடர்ந்து அவளிடம் நீங்க ஹோலி கிராஸ் காலேஜ்ல படிக்கிறீங்களா, என்ன கம்ப்யூட்டர் சயின்ஸ் தானே என்றேன், அவள் என்னிடம் இல்லை நான் இந்திராகாந்தி கல்லூரியில் B.Sc Fashion Technology 2nd year என்றாள்.அதை தொடர்ந்து நான் அவளிடம் பெயர் கேட்க அது எதற்கு என்று சொல்லிவிட்டு, கூப்பிடத்தான் என்றேன் எனக்கு மட்டும் கேட்கும்படி அவள் எதனையும் கண்டுகொள்ளாமல் விறுவிறுவென கல்லூரிக்குள் சென்றாள், அப்போதுதான் கவனித்தேன் என் நண்பன் என்னுடன் இல்லாததை. அப்போது என் பின்னால் இருந்து ஒரு கை என் சட்டையை பிடித்து நிறுத்தியது, திரும்பினால் என் நண்பன், நான் வாடா மச்சான் இவ்வளவு நேரம் எங்கடா போன என்றேன், அவன் என்னிடம் டேய் மரியாதையா ரூ. 20 கொடு நான் கல்லூரி செல்ல வேண்டும் என்றான், நான் அவனிடம் மச்சான் அந்த பொண்ணுகிட்ட அந்த பணத்த கொடுத்து விட்டேன் என்று சொல்லிவிட்டு மச்சான் வாடா நாம ராஜசேகர், தேவராஜ் ரூமுக்கு போலாம் என்றேன். டேய் இன்னைக்கு எனக்கு காலேஜ்ல முக்கியமான செமினார் இருக்கு என்று சொல்ல எனக்கும்தான் என்று சொல்லிவிட்டு ராஜசேகர் ரூம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன், கல்லூரி செல்ல காசு இல்லாமல் அவனும் என் பின்னே நடக்க ஆரம்பித்தான், அன்றிலிருந்து என் attendance குறைய தொடங்கியது.

நான், ராஜசேகர், தேவராஜ் மற்றும் என் நண்பன் எல்லாரும் சும்மா பேசி கொண்டு சீட்டு விளையாடினோம், மதியம் ராஜசேகர் கணக்கில் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, என்னவளின் கல்லூரி முடியும் நேரம் சத்திரம் பேருந்து நிலையத்தில், சமயபுரம் நிறுத்தத்தில் நின்று கொண்டு, காலையில் பேர் சொல்லாத பெண்ணுக்காக காத்திருந்தேன், என் நண்பர்கள் அவர்கள் அறைக்கு சென்று விட, நான் வழக்கமாக கல்லூரி முடிந்தவுடன் ஊருக்கு செல்லும் பேருந்தில் ஏறி நடத்துனரிடம் பேசி கொண்டிருந்தேன், பேருந்து எடுப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னால் என் நண்பன் பேருந்துக்குள் வந்து மச்சான் காலையில பார்த்த பொண்ணு இப்ப வந்துகிட்டு இருக்கு என்று சொல்லிவிட்டு, நீ மதியம் எங்கடா போன என்றான், நான் அவனிடம் ஒன்றும் சொல்லாமல் அவள் வந்து கொண்டிருந்த திசை நோக்கி என்னை மறந்து அவள் ஏறிய பேருந்தில் ஏறினேன், காசு இல்லாமல், அந்த பேருந்து கிளம்ப இன்னும் 5 நிமிடங்கள் இருக்க என் நண்பன் என்னிடம் டேய் கைல காசு இல்லாம அடுத்த பஸ்ல போற என்றான், அப்போதுதான் நான் என்னிலை உணர்ந்து பேருந்தில் இருந்து இறங்க நினைதேன், சட்டென்று எனக்கு ஒரு யோசனை, காலையில் வந்த பஸ்ஸில் சென்று அண்ணே ஒரு 10 ரூபாய் கொடுங்க தருகிறேன் என்று சொல்லி வாங்கி அவள் இருந்த பேருந்தில் ஏறி நின்றேன், நமக்குத்தான் இடம் இருந்தாலும் உட்கார தோணாதே! அப்பா!!! ஆமாம் என் அப்பாவேதான்!!!, அந்த பஸ்சில் இருந்தது என் அப்பாவேதான். நான் பதறிக்கொண்டு இருக்கும் போதே என் பெயர் சொல்லி என்னை அழைத்தார் அப்பா. எங்கடா ஊருக்கு தானே என்றார் நானும் ஆமாம் ஆனா பின்னாடி வர பஸ்ல வரேன் என்றேன், அதற்கு அப்புறம் ஏன் இந்த பஸ்ல ஏறினாய் என்றார், நான் என் நண்பனை காட்டி இவன பார்க்கத்தான் என்று சொல்லி ஒருவாறு சமாளித்தேன், அப்போது என் அப்பா என்னிடம் பைக் சாவி கொடுத்து வண்டி சமயபுரத்தில் இருக்கு நீ எடுத்துகிட்டு ஊருக்கு போ என்றார். சரி என்று சாவியை வாங்கிகொண்டு கீழே இறங்கினேன் நண்பனுடன். இது நடந்து கொண்டு இருக்கும் போதே அவள் அந்த பஸ்சில் இருந்து இறங்கி நாங்கள் காலையில் வந்த பஸ்சில் ஏறினாள். நாங்களும் அதே பஸ்சில் ஏற நடத்துனர் என்னை என்னடா தம்பி அந்த பஸ்ல போரேன்ன இப்ப திரும்ப இங்கயே வந்துட்டன்னு நக்கலா சொன்னார். நான் எதுவும் சொல்லாமல் அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் இருந்த இடத்தில் நின்று கொண்டு இருந்தேன்.பஸ் கிளம்பி ஊரை நோக்கி சென்று கொண்டு இருந்தது, அவள் சமயபுரம் என்று டிக்கெட் வாங்கி கொண்டு பஸ்சில் ஒலித்து கொண்டு இருந்த காதலின் தீபம் படலை ரசிக்க தொடங்கினாள் , நான் அவளை ரசிக்க தொடங்கினேன். சமயபுரம் வந்ததும் நானும், நண்பனும் இறங்க அவள் பின் தொடர்ந்து இறங்கினாள் ஒரு புன்னகையுடன். நான் பைக் நின்ற இடத்தை நோக்கி சென்றேன் அவளும்தான், அப்போதுதான் நான் கண்டேன் ஒரு இளைஞனை, அவனுடன் அவள் பைக் ஏறி செல்ல, நானும் பைக்கில் செல்ல ஆரம்பித்தேன் அவர்கள் செல்லும் பைக் பின்னே குழப்பத்துடன். எனக்கு முன்னால் அவள் சென்ற பைக் சற்று நேரத்தில் வேகம் குறைந்து நின்று விட்டது. நானும் அவர்கள் நின்ற இடத்தில் நிறுத்தி என்ன என்று விசாரிக்க பைக்கில் பெட்ரோல் இல்லை என்பதை அறிந்து, என் வண்டியில் இருந்து கொஞ்சம் பெட்ரோல் எடுத்து அந்த வண்டியில் போட்டு அவர்களை வழி அனுப்பி வைத்தேன், நடக்க போகும் சோகம் தெரியாமல்.

திரும்பவும் அவர்களை பின்தொடர்ந்து சென்று, என்னவள் காலையில் ஏறிய இடத்தில் திரும்பி இடது பக்கம் திரும்பி கடந்தார்கள், அவள் எங்களை நோக்கி ஒரு புன்னகையை வீசிவிட்டு சென்றாள். இன்னும் எங்க ஊருக்கு 15 KM இருக்க நான் வண்டியின் வேகத்தை கூட்டினேன், அவள் உதிர்த்த புன்னகையின் காரணமாக. என் வண்டியின் வேகம் குறைய அப்போதான் கவனித்தேன், பெட்ரோல் அளவை, பெட்ரோல் சுத்தமாக இல்லை . இன்னும் 5 KM போனால்தான் பெட்ரோல் நிரப்ப முடியும், அதுவரை தள்ளி கொண்டுதான் செல்ல வேண்டும். வேறு வழியில்லை, வண்டியை தள்ள ஆரம்பித்தோம், என் நண்பன் என்னை வசை பாட ஆரம்பித்தான். பெட்ரோல் நிலையத்தை நெருங்கியவுடன் பெட்ரோல் போட்டோம் கடனுக்குத்தான், அங்கு இருந்தது என் பள்ளி நண்பன்.வீட்டிற்கு சென்றபோது மணி சரியாக 9. வீட்டை அடைந்தவுடன் இரவு உணவை முடித்துவிட்டு, உறங்க சென்றேன் கனவுகளுடன், மறுநாள் முதல் நடக்க இருக்கும் நிகழ்வுகளை எண்ணி.மறுநாள் காலையில் மீண்டும் கல்லூரிக்கு கிளம்ப என் நண்பன் எனக்கு முன்னதாகவே பாடாலூர் சென்று பஸ்சுக்காக காத்திருந்தான், நான் அவனிடம் என்ன மச்சான் இன்னைக்கு என்கிட்டே சொல்லாம வந்துட்ட என்றேன், இன்று அவன் கண்டிப்பாக கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்று சொன்னான், நான் அதற்கு என்ன மச்சான் உன்ன என்ன தினமும் ராஜசேகர் அறைக்கா கூப்பிட்டேன் என்று அவனை சமாதனபடுத்தி பஸ்சில் ஏறினோம். அன்றும் அவள் நான் சென்ற பஸ்சில் வந்தாள், நேற்று போல இன்றும் பெயர் கேட்க எதற்கு என்ற பதிலுடன் கல்லூரி சென்றாள், நானும்தான். ஆனால் கல்லூரியில் இல்லை என் மனம், என் அறிவு அவள் பெயரை யோசித்துக்கொண்டே, பேராசிரியர் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னேன் என்னையுமறியாமல், என் சக நண்பர்கள் அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி நான் சொன்ன பதிலால். மாலை நேரத்தை எதிர்நோக்கி இருந்த நான் என் நண்பர்களிடம் சொல்லி விட்டு தினமும் சீக்கிரம் செல்ல ஆரம்பித்தேன், இந்த நிலை கிட்டத்தட்ட 6 மாதங்கள் நீடிக்க, ராஜசேகரும், தேவராஜும் சேர்ந்து இன்று அந்த பெண்ணிடம் உன் காதலை தெரியபடுத்து இல்லைன்னா நாங்க சொல்லி விடுவோம் என்று என்னை மிரட்டினார்கள். நான் அவர்களை சமாளித்து அந்த பெண்ணை இன்று உங்களுக்கு காட்டுகிறேன் நாளை அவளிடம் சொல்லி விடுகிறேன் என்று ஒருவாறு சமாளித்தேன். அன்று வெள்ளி கிழமை, சமயபுரத்தில் கூட்டம் அதிகமா இருக்கும், எனவே சற்று முன்னதாகவே நான் ஊரில் இருந்து கிளம்பி சமயபுரம் வந்து ராஜ் மற்றும் தேவா வரும்வரை காத்திருந்தேன், அவர்கள் வந்தவுடன் நேரம் நிறைய இருக்கும் என்பதால் என்னவள் தினமும் பஸ் ஏறும் இடம் வரை நடந்தே சென்றோம் (கிட்டத்தட்ட 4 KM), அவர்கள் என் மேல் மிக்க கோபத்துடன் இருக்க அந்த பேருந்து நிற்கும் இடத்தை அடைந்து காத்திருக்க, அவள் நான் முதல் நாள் பார்த்த ஒரு பையனுடன் பைக்கில் வந்து சேர்ந்தால், அங்கு இருந்தவர்கள் பேசி கொண்டு இருந்ததை வைத்து வந்தது என் மச்சான் ஆக போகிறவன் என்று தெரிந்து கொண்டேன், என் நண்பர்கள் இருவரும் என்னை கண்டுகொள்ளாமல் வேறு எங்கோ வேடிக்கை பார்த்து கொண்டு பஸ்சுக்காக காத்திருந்தார்கள். நான் வழக்கமாக செல்லும் பஸ்சின் நடத்துனர், என்னடா இன்னைக்கு இங்க வந்து நிக்கிற ஒன்னும் சரியா இல்லையே என்றார், நான் அவரிடம் மலுப்பிகொண்டே ராஜ், தேவாவை தேடினேன், ஆனால் அவர்கள் இருவரும் பஸ்சின் முன்னிருக்கை பகுதியில் நின்ற பெண்ணை காட்டி இவளா என கேட்க, நான் இல்லை என்று சொல்லிவிட்டு அவர்கள் அருகில் நின்று கொண்டிருந்த பெண்ணை காட்டி அவள்தான் என்றேன், அவள் தாமரை போன்ற முகத்தை பார்த்த அவர்களின் முகம் காட்டு மல்லிகை கீழே விழுந்து வாடியது போல் ஆகியது. திருச்சி வந்தவுடன், அவர்களிருவரும் மச்சான் இந்த பொண்ணுகிட்ட உன் காதல சொல்லாத, அவ அப்பன் அவங்க ஊரில் பெரிய ஆளுடா, அவ தம்பி பெரிய ரௌடி என்று திகில் கிளப்பினார்கள், என்றும் இல்லாத பயம் அன்று எனக்கு ஆனால் அதற்காக விட முடியாதே, மச்சான் அவ என்கிட்டே பெயரை சொல்லிவிட்டு என் காதலையும் ஒத்துகொண்டால் எந்த பிரச்சினையும் சமாளிப்போம் என்றேன் , அதற்கு என் பால்ய நண்பனுடன் சேர்ந்து மச்சான் நாங்க வரலை இந்த விளையாட்டுக்கு என்று சொல்லி அவரவர்கள் கல்லூரிக்கு சென்றார்கள். அது தேர்வு நேரம், தேர்வை முடித்தவுடன் கிளம்பி அவள் கல்லூரி வாசலில் தவம் இருக்க தொடங்கினேன், அவளுக்கும் தெரியும், ஆவலுடன் அவளின் தோழி ஒருத்தி எப்போதும் வருவாள்,கல்லூரி 3 ஆம் ஆண்டின் கடைசி நாளன்று அவள் தோழியிடம் என் காதலை பற்றி சொல்ல சொன்னேன், என் நண்பர்கள் என்ன சொன்னார்களோ அதே பதிலை அவள் தோழியும் சொன்னாள். இடையில் 15 நாட்கள் நான் அவளை பார்க்கவில்லை.

எனக்கு நான்காமாண்டின் முதல் நாள் அன்று, வழக்கம்போல் என் நண்பனுடன் அதே பஸ்சில் ஏறி திருச்சி சென்றேன், அவளும் அவள் ஊரில் இருந்து கல்லூரிக்கு வந்தாள். மீண்டும் அதே பார்வை, அதே காத்திருப்பு என்று 7 ஆம் செமஸ்டர் முடிந்தது. என் கல்லூரி வாழ்கையின் கடைசி மூன்று மாதங்கள் அது , ப்ராஜெக்ட் வொர்க் என்று சொல்லிவிட்டு தினமும் அவளை பார்க்க திருச்சி வந்துவிட்டு ராஜ் அறைக்கு சென்று விடுவேன். அது மார்ச் மாதம், இன்னும் 15 நாட்களில் அவளுக்கு கல்லூரி படிப்பு முடிந்து விடும், அப்புறம் பார்க்க முடியாது என்று தெரிந்தவுடன், ஒரு முடிவுக்கு வந்தவனாய் அவளுக்காக சமயபுரம் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தேன், நேரம் மிகவும் மெதுவாக போவதாகப்பட்டது எனக்கு. மதியம் மூன்று மணியளவில் அவள் வந்தாள் அவள் தோழியுடன், அவர்கள் ஊருக்கு செல்லும் அரசு பேருந்தில் ஏறினாள், நானும்தான் அவர்களை தொடர்ந்து என் நண்பனுடன் , என் அதிர்ஷ்டம் பேருந்தில் யாரும் இல்லை எங்களைத்தவிர. என் நண்பன் என்னிடம், மச்சான் இன்னைக்கு சொல்லல அப்புறம் ரொம்ப கஷ்டம் என்றான், எங்கிருந்தோ இல்லாத ஒரு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவளை நோக்கி சென்றேன். நான் அவள் தோழியிடம், எனக்கு உங்க தோழிய புடிச்சி இருக்கு என்று சொல்லி விட்டு , ரெண்டு வருஷமா அவங்க பெயர் தெரியாம காதலிச்சிகிட்டு இருக்கேன் என்றேன். அவளின் தோழி என்னிடம், காதல் சொல்ல வரப்ப எதுவும் GIFT வாங்கிவரலே என்றாள்.அப்போது அங்கு வந்த பூ விற்கும் பெண்ணிடம் ஒரு முழம் மல்லிகை பூ வாங்கி என்னவள் அமர்ந்து இருந்த இடத்தில் வைத்துவிட்டு அவள் பெயரை கேட்டேன், அவள் கீதா என்றாள் என் உள்ளம் உருக, என் செவிகளில் "கீதம் சங்கீதம் நீதானே என்" பாடல் கேட்டது. ஒருவழியாக அவள் பெயர் அவளின் மூலமாகவே எனக்கு தெரிய எனது அடுத்த கேள்வியை கேட்டேன், என்னை புடிச்சிருக்கா என்று அவள் பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தாள், பின் அவள் தோழியிடம் ஏதோ சொல்ல அவள் தோழி என்னிடம் வரும் வெள்ளி கிழமை திருவானைகோயிலுக்கு வரசொன்னாள்.எதிர்பார்த்த வெள்ளி கிழமையும் ஒரு வழியாக வந்துவிட நான் கோயிலுக்கு சென்றேன் என் நண்பர்கள் ராஜ் மற்றும் தேவாவுடன்.11 மணியளவில் கீதாவும் அவள் தோழியும் வர நான் அவர்களை சுற்றி கிரிவலம் வர ஆரம்பித்தேன். பின் கீதா என்னிடம் நீங்க நல்லா படிக்கணும், உங்க பெற்றோருக்கு நல்ல பிள்ளையா இருக்கணும் என்று சொல்லிவிட்டு சற்று நேரம் காத்திருக்க சொல்லிவிட்டு சென்றாள். அப்போது தேவாவின் செல்லிடை பேசி ஒலிக்க, என் மாப்ள ராம்ராஜ், பேசினான், டேய் எங்கடா இருக்க இன்னைக்கு எங்க குலசாமி கோயிலில் விசேசம் மதியம் இரண்டு மணிக்குள் வரும்படி சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தான். தூரத்தில் கீதா அவள் தோழியுடன் வந்து கொண்டு இருக்க அவர்கள் பின்னால் ஒரு பையன் வந்தான். கீதா என் அருகில் வந்தவுடன், நான் என்ன உனக்கு புடிச்சிருக்கா இல்லையான்னு கேட்க அவள் அதெல்லாம் நான் சொல்ல மாட்டேன் என்று சொல்லி விட்டு அவள் பின் வந்த பையனை காட்டி இவர் என் அத்தை பையன் என்றாள்...நான் கேட்ட கேள்விக்கு எனக்கு புரியாத அல்லது எனக்கு தெரியகூடாத பதிலை சொல்லிவிட்டு அவள் சென்றுவிட்டாள், முதன்முறையாக நான் கோயிலில் சோக கீதம் பாடுவதை கேட்டுக்கொண்டு அமைதியாக அமர்ந்தேன். என்னையுமறியாமல் என் விழிகளில் கண்ணீருடன்.....

இன்றும் நான் அவளை நினைத்து கனவு காண்கிறேன் ...

ஆம் காதல் என் கனவானதால்......


என்றும் காதலுடன்....
உங்களில் ஒருவன்!!!!தெக்கத்திக்காரன் !!!!
--